வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்குக் கடல் பகுதியை நோக்கி ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென்கொரியா அண்மையில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் சோதித்ததைத் தொடர்ந்து, வடகொரியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைமை அலுவலகத்தின்படி, பியாங்யாங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று 900 கி.மீ.க்கும் அதிகமான தூரம் பறந்துள்ளது. எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்களை தென்கொரியா வெளியிடவில்லை.ஜப்பான் கடலோரக் காவல் படையும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதாரக் கடல் எல்லைக்கு வெளியே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகக் கூறிய தென்கொரியா, ஏவுகணைச் சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு நிலவரம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து வருகின்றன.
கொரிய தீபகற்பத்தில் ராணுவப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கியுள்ளன. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். அண்மையில் தென்கொரியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் சோதித்ததால், இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவப் போட்டி தீவிரமடைந்துள்ளது.